டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நெல்லித்தோப்பு தொகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நெல்லித்தோப்பு அண்ணாநகரில் நேற்று காலை நடந்தது. விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.
புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதியிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் அனைத்து பகுதியிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். இப்பணியை தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மேற்கொள்வார்கள்.
புதுவையில் டெங்கு காய்ச்சலால் யாரும் மரணம் அடையவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புதுவையில் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களை தடுக்க முடியாது. புதுவை அரசு சுகாதாரத்துறை சார்பில் ரத்த அணுக்கள் குறைவுகளை கண்டறியும் நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி பேசினார்.