இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டு, ஐந்து வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ரஷ்யாவோடு 5.5 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்துகொண்டது. மேலும் இந்தியா, இந்த வான்வெளி பாதுகாப்பு மண்டலங்களை வாங்க முன்பணமும் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா, வான்வெளி பாதுகாப்பு மண்டலங்களை இந்தியாவிற்கு விநியோகிக்க தொடங்கியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் 2017ஆம் ஆண்டு அமெரிக்கா இயற்றிய சட்டப்படி, ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும். இதனால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தநிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து வான்வெளி பாதுகாப்பு மண்டலங்களை வாங்குவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், “ரஷ்யாவுடனான பரிவர்த்தனைகளைக் கைவிடுமாறு எங்கள் கூட்டாளிகளைக் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "ரஷ்யாவுடனான பரிவர்த்தனைகளைக் கைவிடுமாறு எங்கள் கூட்டாளிகள் அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவர்களுடனான பரிவர்த்தனை அமெரிக்காவின் சி.ஏ.ஏ.டி.எஸ்.ஏ. சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகளைத் தூண்டும். ரஷ்யாவுடனான இந்திய ஆயுத பரிவர்த்தனை தொடர்பாக பொருளாதார தடைகளைத் தவிர்ப்பது குறித்து நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தில் சிறப்பு சலுகைக்கோ, நாட்டைப் பொறுத்து விலக்கு அளிப்பதற்கோ இடமில்லை" என கூறியுள்ளார்.