மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.
இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.