Skip to main content

'நீட்' தேர்வைத் தொடர்ந்து 'நெக்ஸ்ட்' தேர்வு... நடைமுறைக்கு வந்தது தேசிய மருத்துவ ஆணையம்...

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

nmc replaces mci as per medical bill 2019

 

நேற்றுடன் இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நடைமுறைக்கு வந்தது.

 

1956, இந்திய மருத்துவக் கல்விச் சட்டத்துக்கு உட்பட்டுத் தொடங்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் அமைப்பு, இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளை முறைப்படுத்துவதையும், மருத்துவ மதிப்பீடுகளை மேற்கொள்வதையும் செய்துவந்தது. இந்தநிலையில், மருத்துவத் துறையில் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைக் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்படி 64 ஆண்டுகளாகச் செயல்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாகத் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டது. 

 

மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு மருத்துவ அமைப்புகள், மருத்துவ மாணவர் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. இருப்பினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி, நேற்றோடு இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய அமைப்பு, இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம், முதுநிலை மருத்துவக் கல்வி வாரியம், மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவாரியம், மருத்துவக் கல்வி பதிவு வாரியம் ஆகிய 4 சுயாட்சி வாரியங்களைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "மருத்துவக் கல்வியில் மத்திய அரசால் செய்யப்பட்ட வரலாற்றுச் சீர்திருத்தங்களால், 4 சுயாட்சி வாரியங்களுடன், தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, கடந்த 1956, இந்திய மருத்துவக் கல்விச் சட்டத்துக்குப் பதிலாக 2019, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2020 நடைமுறைக்கு வந்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் படி, எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண்டில் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு முடிவின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். அத்துடன், எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த பின்னர் மருத்துவராகப் பணியாற்றுவதற்கு உரிமம் பெறுவதற்கான தேர்வு, வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்களுக்கான தர நிர்ணயத் தேர்வாகவும் இது நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்