பீகார் மாநிலத்தின் முதல்வராக ஏழாவது முறையாகப் பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார்.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும், இந்தத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், 125 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதேநேரம், இத்தேர்தலில் 75 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி உருவெடுத்தாலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
இதன் காரணமாக, ஆர்.ஜே.டி கட்சி ஆட்சியமைக்க முடியாமல் போனதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முதல்வராக ஏழாவது முறையாகப் பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார். பீகார் ஆளுநர் பாகு சவுகான் ராஜ், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மஹாராஷ்ட்ர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் முக்கியக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்த விழாவில் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.