நாடு முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது என பல பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கூறி வந்த நிலையில் மத்திய அரசு சார்பில் இது குறித்து பெரிய விளக்கங்கள் எதுவும் கொடுக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி குறித்த நிலையை, நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பெட்டியில், "கடந்த 70 ஆண்டுகளில் நாம் இந்த வகையான பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டதே இல்லை. முழு நிதித்துறையும் மாபெரும் சிக்கலில் உள்ளது. தனியார் துறையின் சில அச்சங்களை அகற்ற மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் உடனே செய்ய வேண்டும். பிரச்சனை நிதித்துறையில் தான் உள்ளது என்பதை அரசாங்கம் முற்றிலும் அங்கீகரிக்கிறது. பணப்புழக்கம் நொடித்துப் போயுள்ள இந்த நிலையில், அரசு தான் அதை சரி செய்ய வேண்டும்.
இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதலில், இதற்காக பல அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். இரண்டாவது, தனியார் துறையினருக்கான சில அச்சங்களை அகற்ற அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.
மேலும், குறைந்த நுகர்வு, பலவீனமான முதலீடுகள் மற்றும் குறைவான செயல்திறன் கொண்ட சேவைத்துறை காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மேலும் 5.7 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.