நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்று நாட்களாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், நான்காவது நாள் விசாரணைக்கு ஆஜராகும்படியும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரும் அவரது தாயாருமான சோனியா காந்தி கரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக தனக்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என ராகுல் காந்தி கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அமலாக்கத்துறை அவகாசம் வழங்கிய நிலையில், நான்காவது நாள் விசாரணைக்காக நேற்று ஆஜரானார். இந்த நிலையில், இன்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.