ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய், பவன், அக்ஷய் சிங்கிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லி திஹார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் இன்று (20/03/2020) காலை 05.30 மணிக்கு நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். இதை மாணவியின் பெற்றோர் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். தண்டனை தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும், நிச்சயம் நிர்பயாவின் ஆத்மா சாந்தியடையும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்த நிலையில், குற்றவாளிகள் அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த கோரிக்கைக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தினரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். மேலும் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு குற்றவாளிகளுக்குத் தண்ணீர் மற்றும் டீ வழங்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அதனை ஏற்க குற்றவாளிகள் மறுத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.