புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் புதுச்சேரியில் 72 பேருக்கும், காரைக்காலில் 15 பேருக்கும் தொற்று ஏற்பட்டள்ளது. தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் நேற்று (26/06/2020) சிகிச்சை பலனின்றி 82 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 388 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறும்போது, "இன்று (27/06/2020) புதுச்சேரியில் 87 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காரைக்கால் பகுதியில் 15 பேரும், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 63 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 9 பேரும் ஆக மொத்தம் இன்று மட்டும் 87 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் 14 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையிலும், 4 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில், தற்போது கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 225 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 90 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து 33 பேரும், புதுச்சேரி சேர்ந்த வெளிமாநிலத்தில் 2 பேரும், கடலூர் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் கரோனா தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. எனவே பொது மக்கள் கொரோனா ஒழிக்க 100% ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.
இதனிடையே புதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இரண்டு நாட்களுக்கு முதலமைச்சர் அலுவலகம் மூடப்பட்டது. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் முதல்வர் நாராயணசாமி வழக்கம்போல் சட்டப்பேரவை வந்து தனது பணிகளை மேற்கொண்டு பின்னர் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.