பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,600 கோடி மெகா பணமோசடி செய்தவர் நீரவ் மோடி வழக்கு, விசாரணை என எதுவொன்றிலும் சிக்கிக் கொள்ளாமல் கடந்த ஜனவரி மாத தொடக்கத்திலேயே குடும்பத்துடன் தப்பியோடிவிட்டார்.
அமலாக்கத்துறை வழக்கு, வருமான வரித்துறையின் ப்ளூ கார்னர் நோட்டீஸ் மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் நடவடிக்கை என்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல், தொடர்ந்து வெளிநாட்டு தொழிலைக் கவனிக்கப் போவதாக கடிதம் வழியாகவே தெரிவித்திருக்கிறார் அவர்.
நாட்டையை அதிரவைத்த, ஒரு வங்கியை திவாலாகும் நிலைக்குத் தள்ளிய ஒருவரை அரசு சட்டப்படி கைது செய்யாமல் இருக்கிறது. ஆனால், நீரவ் மோடியைத் தான் பிடிக்க முடியவில்லை, அவரது பொம்மையையாவது எரித்துக் கொள்கிறோம் என்ற அளவுக்கு இறங்கியுள்ளனர் மும்பை மக்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஹோலி தினத்தன்று தீயதை எரிக்கும் வழக்கத்தை வடநாட்டு மக்கள் கொண்டுள்ளனர். அதன்படி, மும்பையில் உள்ள வோர்லி பகுதி மக்கள், நீரவ் மோடியின் 50 அடி உயர கொடும்பாவியை எரித்து 'ஹோலி கா தஹன்' என்ற விழாவைக் கொண்டாடியுள்ளனர். வைரத்தின் மேல் நீரவ் மோடி அமர்ந்திருப்பதைப் போல் இருக்கும் இந்த கொடும்பாவியின் கீழ், ‘பி.என்.பி. ஊழல், வைர கிங்’ என அவர்கள் எழுதியிருந்தனர்.