இந்தியாவில் உள்ள தொலைப்பேசி நிறுவனங்கள் தற்போது 4ஜி சேவை வரை அளித்து வருகின்றனர். முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தொலைப்பேசி சந்தையில் காலடி எடுத்து வைத்ததும், இணையப் பயன்பாட்டிலும், 4ஜி பயன்பாட்டிலும் ஒரு புரட்சியே நடந்தது எனக் கூறுமளவிற்கு, இணைய சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், இணையப் பயன்பாட்டு நேரமும் அதிகரித்தது.
இந்தநிலையில், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில் 5 ஜி சேவையைக் கொண்டுவர பணிகளை மேற்கொண்டு வந்தன. மேலும் தொலைப்பேசி நிறுவனங்கள், இதுதொடர்பான சோதனையை நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரி வந்தன. இந்தநிலையில் தற்போது மத்திய அரசு, 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான சோதனை நடத்தவும், 5ஜி ஸ்பெக்ட்ரம் சோதனை நடத்தவும் தொலைப்பேசி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் இந்த 5ஜி சோதனை, கிராமப்புறம், சிறிய நகரங்கள், பெருநகரங்களில் நடத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனுமதியையடுத்து தொலைப்பேசி நிறுவனங்கள், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் 5ஜி சோதனையை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.