நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100- க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், பயிற்சி முகாம் நடத்துதல், தடை செய்த அமைப்புகளில் ஆட்களைச் சேர்த்தல் ஆகிய புகார்களின் அடிப்படையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமை அலுவலகத்தில் இன்று (22/09/2022) அதிகாலை முதலே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தமிழகத்தின் கோவை, தென்காசி, மதுரை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டின் 10- க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையுடன் இணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 100- க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் கூறுகின்றன.
எனினும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.