இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 22ஆம் தேதி அமரிக்கா சென்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் குவாட் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் 76வது கூட்டத்தில் உரையாற்றினார். அதன்பிறகு கடந்த 27ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டிற்குத் திரும்பினார்.
இதற்கிடையே, இந்திய பிரதமரின் வருகைக்கு அமெரிக்க ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில், பிரபல அமெரிக்க நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், ‘உலகின் கடைசி, சிறந்த நம்பிக்கை: உலகின் மிகவும் அன்பான மற்றும் சக்திவாய்ந்த தலைவர் நம்மை ஆசீர்வதிக்க இங்கே இருக்கிறார்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை குறித்து முதல் பக்கத்தில் செய்தி வெளியானதாக புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த புகைப்படம் பரவத்தொடங்கியதுமே இது போலி என்பது தெரியவந்தது. பல்வேறு ஃபேக்ட் - செக்கர்கள் (fact checkers), பேக்ட்- செக் செய்து, வைரலான புகைப்படத்தில் இருப்பது போன்ற எந்த செய்தியும் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வரவில்லை என்பதை உறுதி செய்தனர்.
இந்தநிலையில், தற்போது தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையே, பிரதமர் மோடி குறித்த செய்தி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. வைரல் புகைப்படத்தினை தனது தகவல்தொடர்பு பிரிவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தி நியூயார்க் டைம்ஸ், "இது முற்றிலும் புனையப்பட்ட படம். பிரதமர் மோடியுடன் புழக்கத்தில் உள்ள புனையப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. உண்மையுள்ள, நம்பகமான ஊடகவியல் தேவைப்படும் நேரத்தில், ஆன்லைனில் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களை மீண்டும் பகிர்வது அல்லது பரப்புவது தவறான தகவல்களையும் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கிறது" என கூறியுள்ளது.