மும்பையில் கரோனா வைரஸ் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி குடிசைப் பகுதியை தாக்கியுள்ளது. இது மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் ஏகப்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அதை கடைப்பிடிப்பதற்கு முடியாத அளவிற்கு மிக மிக நெருக்கமான வீடுகள் அமைந்திருக்கிறது. ஒரு வீட்டிற்குள் 10 அல்லது 20, 30 பேர் வசிக்கக்கூடிய நிலைமை இருப்பதால் இந்தப் பகுதிக்குள் கரோனா வைரஸ் நுழைந்துவிடக் கூடாது என மகாராஷ்டிரா அதிகாரிகள் பெரும் முயற்சி எடுத்து வந்தனர். அவர்களை மீறி கரோனா வைரஸ் தாராவி பகுதியில் நுழைந்துவிட்டது. தாராவி பகுதியில் கரோனாவில் பாதிக்கப்பட்ட ஒருவர் மும்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளா. அவருக்கு கரோனா வைரஸ் எப்படி வந்தது என தெரியாமல் மகாராஷ்டிரா அதிகாரிகள் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.
இதேபோல கேரளாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமூக தொற்று ஏற்பட்டுள்ளதால் சோதனைகளை வெகு வேகமாக நடத்திக்கொண்டிருக்கிறது கேரள அரசு. ஆனாலும் இந்த வைரஸ்களின் பாய்ச்சல் வரும் வாரங்களில் தீவிரம் அடையும் என மகாராஷ்டிரா மற்றும் கேரளா அரசு வட்டாரங்கள் கவலையுடன் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் தாக்குதலை பொருத்தவரை அடுத்த வாரம் என்பது மிக முக்கியமானதாக இருக்கும். கேரளா மாநிலத்தில் கரோனா பாதிப்பு துபாயில் இருந்து வந்தவர்களால் ஏற்பட்டுள்ளது. துபாய் வர்த்தக மையத்தில் இத்தாலி மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் பலர் வந்துள்ளனர். அவர்களிடம் இருந்துதான் இந்த வைரஸ் தொற்றியுள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை கேட்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதால் இந்தியாவில் 144 தடை என்பது எந்த அளவுக்கு பலன் அளிக்கப்போகிறது என்பது வருகிற வாரம் தெரிய வரும். என்கின்றனர் மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள்.