தெலங்கானாவின் ஆர்.ஆர். மாவட்டத்தில் உள்ள எல்.பி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் நாயுடு. இவர் அப்பகுதியில் தனியார் துணிக்கடையில் மேனேஜராக பணியாற்றிவந்துள்ளார். வீட்டிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் அலுவலகம் வருவதை வழக்கமாக கொண்ட அவர், நேற்று (24.09.2021) அலுவலகத்துக்கு வரும் வழியில், இருசக்கர வாகனம் பாதி தூரத்தில் நின்றுபோனது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்த ராம், சிறிது நேரத்திற்குப் பிறகு பொடிநடையாக வண்டியை தள்ளிக்கொண்டு வேலை பார்க்கும் இடத்திற்கு வந்துள்ளார்.
பிறகு, அருகில் இருந்த இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வாகனத்தை விட்டுவிட்டு அலுவலகம் சென்றுள்ளார். மாலை ஏழு மணி அளவில் வேலை முடிந்து, இருசக்கர வாகன கடையில் இருந்து சரிசெய்யப்பட்ட அவரின் வாகனத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருட்டான ஒரு இடத்தில் வண்டி மீண்டும் நின்றுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த அவர், ஒருவேளை பெட்ரோல் இல்லாமல் போயிருக்குமோ என்று நினைத்து பெட்ரோல் டேங்கை திறந்து பார்த்துள்ளார். இருட்டில் எதுவும் தெரியாததால் சிகெரட் குடிக்க வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து பெட்ரோல் டேங்க் உள்ளே காட்டியுள்ளார். இதில் உடனடியாக வண்டி தீப்பிடித்துக்கொள்ளவே, சிறிய அளவிலான காயத்துடன் அவர் தப்பினார். இந்த விபத்தில் வண்டி முழுவதும் எரிந்து சாம்பலானது.