அடாவடி செய்யும் விமான பயணிகளை விரட்ட அரசின் புதிய முடிவு!
விமானங்களில் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் பயணிகள், விமானத்தில் பயணம் செய்ய இந்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதில், பிரச்சனைகளைப் பொருத்து அடாவடி செய்யும் பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்கான தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவசேனா எம்.பி ரவீந்திர கயக்வாத், விமானத்தில் பயணம் செய்யும்போது பணியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டார். இது கைகலப்பில் முடிந்தது. இதனால், ரவீந்திர கயக்வாத் விமானத்தில் பயணம் செய்ய விமான பயணத்திற்கான நிறுவனங்கள் தடைவிதித்தன.
இதுமாதிரியான குற்றங்கள் மேலும் தொடராமல் இருப்பதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி பாபு, ‘விமானிகளின் பாதுகாப்பில் நாம் எப்போதும் சமரசம் ஆகக்கூடாது’ என தெரிவித்துள்ளார். இதுமாதிரியான பட்டியல் உலகில் வேறெந்த நாட்டிலும் கிடையாது.
அந்த பட்டியலின் படி அடாவடியான பயணிகளுக்கு வார்த்தைகளால் சண்டை போட்டுக்கொண்டால் மூன்று மாதமும், அடிதடி சண்டைகளில் ஈடுபட்டால் 6 மாதங்களும், உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் இரண்டு முதல் ஆயுட்கால பயணத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் சர்வதேச விமானங்களில் பயணிப்பதற்கும் பொருந்தும்.
- ச.ப.மதிவாணன்