பசுக்களை இறைச்சிக்காகக் கொல்வதைத் தடுக்கும் வகையிலான பசுவதை தடுப்பு சட்ட மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் பசுவதை தடுப்பு சட்டத்தைக் கொண்டுவந்தது. இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் பெறுவதற்கும் அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை ரத்து செய்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அம்மாநிலத்தில் இந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்த சட்டங்கள் அமலில் உள்ள குஜராத், உற்றப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று இந்த சட்டம் குறித்து ஆய்வுசெய்த கர்நாடக மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சவுஹான், நேற்று முன்தினம் இதுதொடர்பான சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பசுவை இறைச்சிக்காகக் கொல்வதும், அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்வதும் சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, இந்த செயல்களில் ஈடுபடுவோருக்கு புதிய சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும். பசுவைத் துன்புறுத்துவோருக்கு ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழலில், பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வரையா ஹெக்டே காகேரி குரல் வாக்கெடுப்பு நடத்தி, பசுவதை தடுப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துள்ளார்.