ஒடிஷா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் 21 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் கணேஷி லால் பதவிப் பிரமாணத்தைச் செய்து வைத்தார். இந்த புதிய அமைச்சரவையில் பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த ஐந்து பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஒடிஷா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 20 அமைச்சர்களும் ஒவ்வொருவராகப் பதவி விலகினர். இதையடுத்து, 21 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பதவியேற்றுக் கொண்டது. இதில், பழங்குடியின தலைவராக உள்ள ஜெகநாத் சராகா முதன்முறையாக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
நவீன் பட்நாயக் முதலமைச்சராகப் பதவியேற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரது தலைமையிலான அமைச்சரவை முதன்முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் முதலமைச்சர் நவீன் பட்நாயக், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.