வாரணாசியில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக மொட்டையடித்து ஜெய்ஸ்ரீராம் எனக் கோஷமிட வைத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
இந்தியா, நேபாளம் இடையான உறவில் எல்லைப்பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசிய நேபாள பிரதமர் சர்மா ஒலி, ராமர் இந்தியர் இல்லை எனவும், அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், வாரணாசியில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக மொட்டையடித்து ஜெய்ஸ்ரீராம் எனக் கோஷமிட வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான வீடியோவில், அடையாளம் தெரியாத நேபாளி நபர் ஒருவர் ஆற்றின் அருகே அமரவைக்கப்பட்டு, சர்மா ஓலி மற்றும் நேபாளத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்ப வற்புறுத்தப்பட்டது பதிவாகியுள்ளது. நேபாளி மொழியில் பேசும் அந்த நபர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷமிடவும் தூண்டப்படுகிறார். மேலும், விஸ்வ இந்து சேனாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்ப அவர் வற்புறுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, "நேபாள பிரதமர் எங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கவில்லை, எனவே நாங்கள் சம்பாதிக்க இந்தியா வந்தோம். எங்கள் உரிமைகளை ஏன் பறிக்கிறீர்கள்? நிறைய நேபாளிகள் வெளிநாடு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்தியாதான் எங்களுக்கு ஆதரவு வழங்கியது” என அந்த நபர் சொல்வதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தக் காணொளி இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாரணாசி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.