நாளை (17/07/2022) பிற்பகல் 02.00 மணிக்கு நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரு நகல்கள் வைத்துக் கொள்ள வேண்டும். பிற்பகல் 01.30 மணிக்கு நீட் தேர்வு மைய நுழைவுவாயில் மூடப்படும். அதன்பின் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை அவசியம். மாணவர்கள் செல்போன்களில் கொண்டு வரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
தேர்வு மையத்தில் வழங்கப்படும் என்.95 முகக்கவசத்தை மாணவர்கள் கட்டாயம் அணிய வேண்டும். மாணவர்கள், பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டின் உரிய இடத்தில் இருக்க வேண்டும். தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரு முறை வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும். மாணவர்கள் வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்களை வைத்திருக்கலாம். செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதனப் பொருளையும் மாணவர்கள் தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது என மாணவ, மாணவியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.