இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கனமழையால் நேற்று வரை 28 பேர் பலியாகினர் என அந்நாட்டு அரசு அறிவித்தது. நேபாளத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 24 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அசாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 9 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. அதே போல் மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார். அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதல்வருக்கு உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அதிக அளவில் அசாம் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.