Skip to main content

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
NEET question paper leak issue; Supreme Court action order

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.

இதற்கிடையே நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதே சமயம் நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு முடிவுகளை ஏன் ரத்து செய்யவில்லை என்பதற்கான விளக்க உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இன்று (02.08.2024) வாசிக்கப்பட்டது. அதில், “வினாத்தாள்களைத் தயாரிப்பது முதல் அதைச் சரிபார்ப்பது வரை கடுமையான சோதனைகளை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.

NEET question paper leak issue; Supreme Court action order

வினாத்தாள்களைக் கையாளுதல் மற்றும் சேமித்தல் போன்றவற்றைச் சரிபார்க்க தற்போது உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். வினாத்தாள்களை எடுத்துச் செல்ல நிகழ் நேர (ரியல் டைம் லாக்) கதவு கொண்ட பாதுகாப்புடன் உள்ள வாகனங்களைப் பயன்படுத்தப்படுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். வினாத்தாள் கசிவு போன்றவற்றைத் தடுக்கும் வகையில் சைபர் பாதுகாப்பு முறைகளில் நவீனத் தொழில்நுட்பத்துடனான கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். வினாத்தாள் கசிவுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் மின்னணு கைரேகைகள், இனையப் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரிபாத்தில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே நடந்துள்ளது. இதனால் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரியல்ல. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதே சமயம் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை நிபுணர் குழு அமைத்துச் சரி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்