கரோனா பரவல் காரணமாக முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நீட் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியிடப்படுவதற்கும், நீட் தேர்வுக்கும் இடையே 60 நாட்கள் இடைவெளி இருக்கும்.
தேர்வு நிலையங்கள், தேர்வு அறைகளை ஒதுக்குவது போன்ற பணிகளுக்காக இந்த இடைவெளி பயன்படுத்தபடும். ஆனால், தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இன்னும் நீட் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியிடப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறுமா என சந்தேகம் நிலவிவருகிறது. நீட் தேர்வு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என சந்தேகமும் நிலவிவருகிறது.
இந்தச் சூழலில், நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாக, தேசிய தேர்வு முகமை பெயரிலான அறிவிப்பு ஒன்று சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. அந்த அறிவிப்பில் நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி, இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சமூகவலைதளங்களில் பரவிவரும் அறிவிப்பு போலியானது என தெரியவந்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் வினீத் ஜோஷி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், "நீட் குறித்த அறிவிப்பு போலியானது. தேசிய தேர்வு முகமை அதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை" என கூறியுள்ளார்.