பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும், வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இத்தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், "தற்போதைய பீகார் அரசு, அதன் பாதையிலிருந்து விலகிவிட்டது. அவர்கள் சொல்வது, செய்வது எதுவும் நல்லதல்ல. தொழிலாளர்கள் உதவியற்று நிற்கிறார்கள், விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள். இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொதுமக்கள் ஆதரவு காங்கிரஸின் மெகா கூட்டணிக்கே உள்ளது. சிறந்த மாநிலத்தைக் கட்டமைக்கும் தரம், திறமை, வலிமை மற்றும் சக்தி ஆகியவை பீகார் மக்களிடையே உள்ளன. ஆனால் வேலையின்மை, இடம்பெயர்வு, பணவீக்கம், பட்டினி ஆகியவை அவர்களுக்குக் கண்ணீரையும் காயத்தையும் கொடுத்துள்ளன. பயம் மற்றும் குற்றத்தின் அடிப்படையில் ஒரு ஆட்சியை அமைக்க முடியாது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.