முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மாற்று இடம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்துவருகிறது.
அந்த வகையில் இவ்வழக்கு இன்று (25/11/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 200 சதுர மீட்டரில் ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவதா? என்று தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர். நீதி வேண்டும் என்பது மட்டுமின்றி, நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே இயற்கை விதி. எனவே, ஆறுமுகசாமி ஆணையத்துக்குப் போதுமான அளவு மாற்று இடத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போலோ கூடுதலாக என்ன கோரிக்கை வைக்கிறதோ அதனை எழுத்துப்பூர்வமாக வழங்கினால் பரிசீலனை செய்யப்படும். ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும். ஆணையத்துக்கு உதவ கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆணையம் விசாரணை பற்றி செய்தி சேகரிக்க அனைத்து செய்தியாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.