இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் முறைகேடு தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது. இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜார்க்கண்டில் உள்ள பள்ளி ஒன்றின் முதல்வர் அசானுல் ஹக், அப்பள்ளியின் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.