இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளன. டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி தெரிவிப்பதும், ஆக்ஸிஜன் முழுவதுமாக தீர்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், புதிய நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருகின்றன.
டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் டெல்லி அரசு, 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மத்திய அரசு தராவிட்டால், டெல்லியில் நிலைமை முற்றிலும் சீரழிந்துவிடும் என தெரிவித்துள்ளது.
மேலும், ஆக்ஸிஜன் வழங்குவது தொடர்பான உறுதிமொழியை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என்றும் டெல்லி அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், 120 மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் சென்று சேருவதை உறுதிப்படுத்த, 10 அதிகாரிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும் எனவும் டெல்லி அரசு நீதிமன்றத்தில் கோரியுள்ளது.