பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உடன் அவர் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பில் இருந்து தற்போது ராஜினாமா செய்துள்ளார். முதல்வராக ஏற்கனவே இருந்த அமரீந்தர் சிங் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டவுடன் சித்துவைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். சித்துவின் நடவடிக்கைகளைக் காங்கிரஸ் கட்சி மறைமுகமாக ஆதரிக்கிறதோ என்று சந்தேகம் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை அவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே அதிருப்தியில் இருந்து வந்த அம்ரீந்தர் சிங் பாஜக பக்கம் செல்ல இருப்பதாகத் தகவல் கசிந்த நிலையில், சித்து ராஜினாமா அம்மாநில அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளது. முதல்வர் வேட்பாளராக அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் சித்து முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதற்காக அவர் ராஜினாமா செய்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.