Skip to main content

“எங்கெங்கோ சென்று அமைதியை ஏற்படுத்துவேன் எனப் பேசும் மோடி மணிப்பூர் போகாதது ஏன்” - டி.ஆர். பாலு

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

'Why didn't Modi go to Manipur when he said he would go somewhere and bring peace?'-D.R. Balu interview

 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) முதல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை நடைபெற உள்ளது.

 

மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம்  மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டி.ஆர்,பாலு, திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசுகையில், “மக்களவையில் மாநிலங்களவையில் விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளோம்' மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது ஒரு மாநிலம். அதுவும் பார்டரில் ஒரு மாநிலம் மணிப்பூர். மிகவும் சென்சிடிவ் ஏரியா. இப்பொழுது பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. அந்த இடத்தில் மிக மோசமான சூழ்நிலை இரண்டு சமூகத்திற்கு இடையே ஏற்படுகிறது. அங்கு பிஜேபி ஆட்சி தான் இருக்கிறது.

 

கிட்டத்தட்ட 142 பேர் இறந்துள்ளார்கள். 300 பேருக்கு மேல் மிக மோசமான காயம்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்கள். 56,000 பேர் அந்த மாநிலத்திலேயே வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில், பத்தாயிரம் பேர் கொண்ட ராணுவப்படை உள்ளே போனதும் சட்டம் ஒழுங்கு போய்விட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பாஜக ஆட்சி அங்கு நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையையெல்லாம் சுட்டிக்காட்டுவதற்கு, அரசாங்கத்தைத் தட்டிக் கேட்பதற்காக நாங்கள் நோட்டீஸ் கொடுக்கப் போகிறோம்.

 

பிரதமர் மோடி எங்கெங்கோ போகிறார். அமைதியை ஏற்படுத்துகிறேன் என்று பேசுகிறார். உக்ரைனில் அமைதி நிலவ எல்லா நாடுகளின் தலைவர்களையும் பார்க்கிறார். ஆனால், தன்னுடைய ஊரில், தன்னுடைய நாட்டில் ஒரு மாநிலம் இவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறது என்பதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. போய்ப் பார்க்கக் கூட இல்லை. எதிர்க்கட்சிகள்தான் போய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளோம். 20 மணி நேரத்திற்கு மேலாக பொன்முடியை விசாரிக்கிறார்கள். விசாரணை பற்றி எந்தத் தவறும் இல்லை. தப்பு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டும். அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் அவர்கள் அழைத்துச் செல்லும் பொழுது மனிதாபிமான முறையில் அவர்கள் நடத்தப்படுகிறார்களா'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்