தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று புதுச்சேரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பொழியக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை மற்றும் புயலால் புதுச்சேரியில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மூன்று பேரிடர் மீட்புப் படைக் குழுவினர் வந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதற்கட்டமாக 25 நபர்கள் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் புதுச்சேரி வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மீட்புக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் வல்லவன் நேரில் சந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எந்தெந்தப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள், அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்ட விஷயங்களை எடுத்துரைத்தார். இதே போன்ற மற்றொரு குழு புதுச்சேரிக்கும், ஒரு குழு காரைக்காலுக்கும் வர உள்ளது. இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள நாளை காலை பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.