Skip to main content

‘தாதாசாகேப் பால்கே’ முதல் ‘ஒத்த செருப்பு’ வரை... தேசிய விருதுகளைப் பெறும் தமிழ் நட்சத்திரங்கள்..!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

 National award winning Tamil filmmakers ...

 

டெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று (25.10.2021) காலை 11 மணிக்கு 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளைப் பெற இருக்கின்றனர். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.

 

அதேபோல், சிறந்த படத்துக்கான தேசிய விருதைக் கேரள நடிகர் மோகன்லாலின் 'மரைக்காயர் அரபிக்கடலின்டே சிங்கம்' படம் பெறுகிறது. நடிகர் தனுஷ் இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறவிருக்கிறார். ஏற்கனவே 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆடுகளம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற நிலையில், 'அசுரன்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதையும் வெற்றி மாறன் இயக்கிய 'அசுரன்' படம் பெறுகிறது. 'போன்ஸ்லே' இந்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மனோஜ் பாஜ்பாயிக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது.

 

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ‘மணிகர்ணிகா’, ‘பங்கா’ படங்களில் நடித்ததற்காக கங்கனா ரணாவத் பெற இருக்கிறார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட இருக்கிறது. ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே...' பாடலுக்காக இசையமைப்பாளர் இமான் சிறந்த இசையமைப்பாளர் விருது பெறவுள்ளார். சிறந்த ஜுரி தேசிய விருது ‘ஒத்த செருப்பு’ படத்திற்காக நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட இருக்கிறது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது ‘கே.டி’ படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு வழங்கப்பட இருக்கிறது. தேர்வான நடிகர்களுக்கு இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்குகிறார். விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்