'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (24/10/2021) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "100 கோடி கரோனா தடுப்பூசி டோஸைக் கடந்த பிறகு நாடு புதிய ஆர்வத்துடன் முன்னேறுகிறது. தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையைப் பறைச்சாற்றுகிறது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31- ஆம் தேதி அன்று தேசிய ஒற்றுமைத் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கினால் ஏழை வியாபாரிகளின் வீட்டில் பிரகாசம் ஏற்படும். நாட்டில் கிராமங்களில் நிலப்பரப்பை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் பணிகளில் ட்ரோன் ஈடுபடுத்தப்படுகிறது. இந்திய பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்களது வலிமையை வெளிப்படுத்தி வருகின்றன. துணை ராணுவம் உள்ளிட்ட காவல் படைகளில் சேர்ந்துள்ள பெண்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் நாடு தழுவிய கோலப்போட்டி நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.