ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள எம்3எம் என்ற தனியார் ரியல் எஸ்டேட் குழுமத்தின் இயக்குநர்களான பசந்த் மற்றும் பங்கஜ் பன்சால் ஆகியோர் மீது பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பான வழக்கு நேற்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது ரியல் எஸ்டேட் இயக்குநர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, அமலாக்கத்துறையினர் நடவடிக்கையை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதில் அவர் கூறியதாவது, “இந்த நாட்டில் அமலாக்கத்துறைக்கு இப்போது கடுமையான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அமலாக்கத்துறையின் இந்த அதிகாரங்களை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த நாட்டில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
இந்த அதிகாரங்களை தனிநபர் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படாதவாறு கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரியல் எஸ்டேட் இயக்குநர்கள், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்தாலும் கைது என்பது அவர்களது உரிமைகளை மீறும் செயலாகும். ஆகையால், இது போன்ற அதிகாரங்களை நீதிமன்றத்தால் மட்டும் தான் தடுத்து நிறுத்த முடியும். இந்த அதிகாரங்களை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்” என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.