இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றுள்ளார். 120க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும் முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளன.
குறிப்பாக 2050ஆம் ஆண்டிற்குள் பசுமை இல்ல வாயுக்களின் நிகர உமிழ்வை பூஜ்ஜியமாக்குவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்தநிலையில், நேற்று (01.11.2021) இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா சார்பாக ஐந்து உறுதிமொழிகளை முன்வைத்துள்ளார். முதலாவதாக 2030க்குள் இந்தியா தனது புதைபடிவ மாற்று ஆற்றல் திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இரண்டாவது உறுதிமொழியாக, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின் தேவைகளில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பூர்த்தி செய்யும் என தெரிவித்த பிரதமர் மோடி, மூன்றாவதாக, 2030க்குள் இந்தியா தனது கரியமில வாயு வெளியேற்றத்தை ஒரு பில்லியன் டன் குறைக்கும் என கூறியுள்ளார். மேலும், 2030க்குள் பொருளாதாரத்தில் கார்பனின் பங்களிப்பை 45 சதவீதத்திற்கும் கீழாக இந்தியா குறைக்கும் என்பதை நான்காவது உறுதிமொழியாக தெரிவித்த பிரதமர் மோடி, 2070ஆம் ஆண்டிற்குள் பசுமை இல்ல வாயுக்களின் நிகர உமிழ்வை பூஜ்ஜியமாக்குவது என்ற இலக்கை இந்தியா அடையும் என்பதை ஐந்தாவது உறுதிமொழியாக அளித்துள்ளார்.
ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவும், அந்த நாட்டின் இயற்கை பரப்புகள் உறிஞ்சிக்கொள்கிற பசுமை இல்ல வாயுக்களின் அளவும் சமமாக இருந்தால் அது நிகர உமிழ்வு பூஜ்ஜியம் எனப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.