பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து விமர்சித்து வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.பி. ஜோஷி ராஜஸ்தானில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோது, ”பிரதமர் மோடி, உமா பார்த்தி ஆகியோருக்கு ஹிந்து மதத்தை பற்றி என்ன தெரியும். அவர்கள் என்ன பிராமணர்களா” என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாப்பர், ”பிரதமர் மோடியின் தாயாரின் வயது போன்று டாலருக்கு நிகராக இந்தியா ரூபாயின் மதிப்பு இருக்கிறது” என்றார். இதற்கு மோடியும் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மும்பையில் காங்கிரஸ் உட்கட்சி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முத்தம்வார் கலந்து பேசுகையில், ”நீங்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு உங்களை யாருக்கு தெரியும்? இப்போதும் கூட உங்கள் தந்தையின் பெயர் கூட யாருக்கும் தெரியாது” என்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. மேலும் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள முத்தம்வார், ”இது உண்மைதான். ராகுல் காந்தியின் தந்தை, ”அவரது பரம்பரை பற்றி உலகம் அறியும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் தந்தையை” பற்றி யாருக்கு தெரியும் என்றார்.