
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை கடந்த புதன் அன்று ராகுல் துவங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை கொடுத்து இந்த யாத்திரையை தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்த பயணம் 150 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. தமிழகத்தில் நடைப்பயணத்தை முடித்து கேரளாவிற்கு சென்ற ராகுல் காந்திக்கு வலி நெடுகிலும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் நெமம் முதல் பட்டோம் இடையே ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கு கொண்டனர். இடையே நடைப்பயணத்தில் இளைப்பாறுவதற்காக வழியில் தேநீர் கடையில் தேநீர் வாங்கி குடித்தனர். அப்போது அந்த கடையின் உரிமையாளரிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி அவரின் குழந்தைகள் பற்றிய விவரங்களையும் கேட்டறிந்தார். இதனால் நெகிழ்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் பல வருடமாக தேநீர் கடை நடத்துவதாகவும் தேசத்தின் மிக முக்கிய கட்சியின் தலைவராக இருந்தவர் தனது கடையில் தேநீர் அருந்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதே போல் மற்றுமொரு கடையில் நுழைந்து டீ குடித்தும், அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு இன்னொரு டீ குடுங்க என்று வாங்கி ருசி பார்த்திருக்கிறார்; அத்தோடு அந்த கடைக்காரர் ராகுல் தோளின் மீது கை போட்டு படம் எடுத்துக் கொண்டார். அந்த படம் இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

நடைப்பயணத்தில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். ராகுலின் நடைப்பயணத்தில் இணைந்து சிறிது தூரம் நடந்த அவர்கள் வேலை கிடைக்க வேண்டி நடக்கிறோம் என்று வாசகம் பொறித்த மேலாடையை அணிந்திருந்தனர்.
பிற்பகல் பட்டோம் என்ற இடத்தில் ஓய்வு எடுத்து அங்கிருந்து கலக்கோட்டம் வரை நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில் விழிஞம் துறைமுகம் மற்றும் சில்வர் லைன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் அமைப்பினரை எதிர்த்து ராகுல் காந்தி சந்தித்து பேச இருக்கிறார். கேரளாவில் மட்டும் 19 நாட்களில் 450 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.