உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த குழந்தைக்காக ரம்ஜான் நோன்பை கைவிட்ட இஸ்லாமிய இளைஞர் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
பீகார் மாநிலம் தர்பங்கா நகரைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ராகேஷ்குமார் சிங். இவரது மனைவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில மணிநேரங்களில் உடல்நிலை கவலைக்கிடமாக ஆனதை அடுத்து, குழந்தையின் ரத்தவகையான ஓ நெகட்டிவ்வை உடனடியாக தயார் செய்தால் மட்டுமே குழந்தையை உயிருடன் மீட்கமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராகேஷ்குமார் சிங் எங்கு தேடியுன் குறிப்பிட்ட அந்த ரத்தவகை கிடைக்காததால், தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞரான முகமது அஸ்பாக், தாமாக முன்வந்து ரத்ததானம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகை வரவிருக்கும் நிலையில், கடந்த சில தினங்களாக நோன்பு கடைபிடித்து வரும் முகமது அஸ்பாக், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பதற்காக நோன்பினைக் கைவிட முடிவு செய்துள்ளார். மேலும், பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் குழந்தைக்கு ரத்ததானம் தருவதை பெருமையாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையில் நோன்பு கடைபிடிப்பது முக்கிய கடமைகளுள் ஒன்று என்பதால், உயிருக்கு போராடும் குழந்தைக்காக நோன்பினை கைவிட்ட முகமது அஸ்பாக் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் பாட்னாவில் 8 வயது குழந்தையைக் காப்பதற்காக, ஜாவித் அலாம் எனும் இஸ்லாமிய இளைஞர் தனது நோன்பினைக் கைவிட்டது பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.