இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் வீட்டினருகே வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வேஸை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. இதன்பிறகு திடீரென மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். போலீஸார் செய்த மன்னிக்க முடியாத குற்றத்திற்காக அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்தநிலையில் பரம்பீர் சிங், மஹாராஷ்ட்ரா முதல்வருக்கு எட்டு பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், சச்சின் வேஸ் மூலம் மாதம் 100 கோடி ரூபாய் மாமூல் வசூலித்து தருமாறு மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் போலீஸாரைக் கட்டாயப்படுத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இது மஹாராஷ்ட்ரா அரசியலில் புயலைக் கிளப்பியது. அனில் தேஷ்முக் பதவி விலக வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மஹாராஷ்ட்ராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதினார். மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனாவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத் பவார், “பரம்பீர் கூறுவது ஆதாரமற்ற குற்றசாட்டு. எனவே அனில் தேஷ்முக் பதவியிலிருந்து விலகுவது என்ற கேள்விக்கே இடமில்லை” என தெரிவித்தார்.
இந்தநிலையில் பரம்பீர் சிங், அனில் தேஷ்முக் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. அதேநேரதத்தில் அனில் தேஷ்முக் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று அனில் தேஷ்முக் மீது சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அனில் தேஷ்முக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை மஹாராஷ்ட்ரா முதல்வருக்கு அனுப்பியுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.