இந்தையாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பரவலாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்ட் டோஸ்களை செலுத்திக் கொள்வதற்கான கால அளவை மத்திய அரசு 12-16 வாரங்களாக நிர்ணயித்துள்ளது. இதற்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்தநிலையில் கோவிஷீல்ட் டோஸ்களை செலுத்திக்கொள்வதற்கான கால அளவை குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என் கே அரோரா, விரைவில் கோவிஷீல்ட் டோஸ்களை செலுத்துவதற்கான கால அவகாசத்தை குறைப்பது குறித்து முடிவெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த வெவ்வேறு வயதினரின் மேல் தடுப்பூசி ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், தடுப்பூசி டோஸ்களின் இடைவெளி ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் தரவுகளை சேகரித்துள்ளோம். அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்களில், அறிவியல் ரீதியிலான ஆதாரங்களின் அடிப்படையில், கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களின் இடைவேளையை குறைப்பது குறித்து, குறிப்பாக 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் டோஸ்களின் இடைவேளையை குறைப்பது குறித்து நாங்கள் முடிவெடுக்கலாம்" என தெரிவித்துள்ளார்.