தெலுங்கானாவில் மாஞ்செரி அரசு மருத்துவமனையில் மம்தா மற்றும் பவானி என்ற 2 கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் கடந்த 27 ஆம் தேதி இரவு ஒரே நேரத்தில் பிரசவ வலி வந்தது. மருத்துவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளித்தனர். ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஆண் குழந்தையும் ஒருவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது.
செவிலியர்கள் குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். யாருக்கு ஆண் குழந்தை என்றும் பெண் குழந்தை என்றும் செவிலியர்கள் குறிப்பிட மறந்துவிட்டனர். குழந்தைகளுக்கு சிகிச்சை முடிந்ததும் எந்தக் குழந்தையை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களது தாய்மார்களிடமே கேட்டு விஷயத்தை முடிவிற்கு கொண்டு வர நினைத்த செவிலியர்கள் தாய்மார்களிடம் கேட்டுள்ளனர். இருவருமே தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது எனக் கூறினர். மேலும் இரு தரப்பு பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதனால் மேலும் குழப்பமடைந்த செவிலியர்கள் குழந்தைகளை மருத்துவமனையில் வைத்துள்ளனர். ஆண் குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க தீர்மானித்த மருத்துவ நிர்வாகம் டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகளை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மம்தா கணவர் ரமேஷ், “எனது மனைவி மம்தாவிடம் உங்களுக்குப் பிறந்தது என்று சொல்லி முதலில் ஆண் குழந்தையைக் கொடுத்தார்கள். ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவதற்காக நாங்கள் குழந்தையை எடுத்துச் சென்றோம். நாங்கள் வார்டுக்குத் திரும்பிய பிறகு, மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் குழந்தையை எடுத்துச் சென்றனர். தவறு நடந்திருப்பதாகவும், மம்தா பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் இப்பொழுது சொல்கிறார்கள்” என்றார்.