ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு கடந்த இரு தினங்களாக தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். கொடிக்குன்னில் சுரேஷின் பெயரை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முன்மொழிந்தனர். மேலும் ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்யும் தீர்மானத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் தீர்மானத்தை வழிமொழிந்தனர். இதனையடுத்து 18வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுயும் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து அவரை வாழ்த்தினர்.
அதே சமயம் இடைக்கால சபாநாயகரின் கடமைகளை நிறைவேற்றியதற்காக பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப்க்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நன்றி தெரிவித்துள்ளார். சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதையடுத்து பிரதமர் மோடி பேசுகையில், “மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே, நீங்கள் இரண்டாவது முறையாக இந்த நாற்காலியில் அமர்ந்திருப்பது பேரவையின் அதிர்ஷ்டம். உங்களுக்கும் ஒட்டுமொத்த சபைக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.