3 ஆவது மாடியில் இருந்து பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி நியூ அசோக் நகரில் ஜெய் அம்பே அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த காவல்துறை விசாரணையில், குடியிருப்பில் வசிக்கும் 20 வயது பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளதும், அவர் குழந்தையை 3 ஆவது மாடியில் இருந்து வீசியதும் தெரியவந்தது. அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்தனர். அதில், அவர் நொய்டாவைச் சேர்ந்த பெண் என்பதும் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. குழந்தை தனக்குப் பிறந்தது தான் என்பதையும் மாடியில் இருந்து குழந்தையை வீசியதையும் பெண் ஒப்புக்கொண்டார். இதன் பின் அவரது வீட்டினை ஆய்வு செய்த காவல்துறையினர், வீட்டில் இருந்த குப்பைத்தொட்டியில் ரத்தக்கறை இருந்ததைக் கண்டறிந்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும் பொழுது, “அப்பெண்ணிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்பெண்ணை கர்ப்பமாக்கிய நபரின் விபரங்களைக் கொண்டு அவரை தீவிரமாகத் தேடி வருகிறோம். பிறந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் ஜன்னல் வழியே வெளியில் வீசியுள்ளார். மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற விஷயம் வெளியுலகிற்கு தெரிந்தால் அவமானம் என முடிவெடுத்தும் பெற்ற குழந்தையை வீசிக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்” எனக் கூறினர்.