குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள மோர்பி என்ற இடத்தில் மச்சு ஆற்றுக்கு மேல் தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தொங்கு பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 230மீ நீளமுடைய இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு 140 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகப் பாலத்தின் கேபிள்கள் சரி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 4 நாட்களுக்கு முன்புதான் இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை 6 மணி அளவில், 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில், பாலத்தில் இருந்த மக்கள் உற்சாகத்தில் ஓடி விளையாடியுள்ளனர். இதனால், அந்த தொங்கு பாலமும் ஆடத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், என்ன செய்வது என யோசிப்பதற்குள் அவர்களின் எடையைத் தாங்க முடியாத மோர்பி தொங்கு பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.
அதன் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த தேசியப் பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநிலப் பேரிடர் மீட்புப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கர விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. ஆனால், ஆற்றுக்குள் இன்னும் பலர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விபத்து குறித்துப் பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாலத்திற்கான தகுதிச் சான்றிதழை மாநகராட்சி வழங்காமலேயே பாலம் திறக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, “குஜராத் தொங்குபாலம் விபத்தில் என் நெஞ்சே வலிக்கிறது. ஒருபுறம் வலி நிறைந்த இதயம் இருந்தாலும், மறுபுறம் கடமைக்கான பாதையும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மோர்பி தொங்கு பாலம் அறுந்துவிழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பார்ப்பவர்களைப் பதற வைக்கும் இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
CCTV FOOTAGE of #MorbiCableBridge Collapse exactly at 6.31 pm 30.10.2022 #MorbiBridgeCollapse #Morbi #MorbiCableBridge #MorbiTragedy @tv9gujarati @sandeshnews @VtvGujarati @Zee24Kalak pic.twitter.com/ro7pSzETIi— Uttam Trasadiya (@uptrasadiya) October 31, 2022