Skip to main content

“வாழ்க்கையில் இது போன்ற வலியை நான் அனுபவித்ததில்லை” - பிரதமர் மோடி உருக்கம்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

morbi bridge collapse PM Modi said that I have never felt such pain in my life

 

குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்ற போது இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஆற்றில் மூழ்கிய பலரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஆற்றில் விழுந்தவர்களைத் தேடும் பணி தொடர்ந்து 2ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.  இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதே போல், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதைத் தொடர்ந்து, இது தொடர்பாக குற்றவியல் வழக்கு பதியப்பட்டு விசாரணையும் துவக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இந்த பாலமானது கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புதான் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

 

மேலும் குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அகமதாபாத்தில் சாலைப் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தார். விபத்தைத் தொடர்ந்து பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், குஜராத் மாநிலம் கெவடியா பகுதியில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதன் பின் அவர் பேசுகையில் நான் ஏக்தா நகரில் உள்ளேன். ஆனால் என் மனம் மோர்பி பாலத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைத்துக்கொண்டு உள்ளது. என் வாழ்க்கையில் இது போன்ற வலியை நான் அனுபவித்ததில்லை. ஒரு புறம் இதயம் முழுவதும் வலி நிறைந்துள்ளது. மறுபுறம் கடமையைச் செய்வதற்கானப் பாதை இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் பாதுகாக்கவும் எவ்வித அலட்சியமும் காட்டப்படமாட்டாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்