பிரதமர் மோடி இன்று காலை காஷ்மீர் செல்ல இருக்கும் நிலையில் காஷ்மீரில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சம்பா மாவட்டம் பாலி பஞ்சாயத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்திலும் பங்கேற்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பனிகால்-காசிகுண்ட் இடையே 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8.45 கிலோமீட்டர் தூர இரட்டை சுரங்க பாதையை திறந்து வைக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பாலி பஞ்சாயத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 கிலோ வாட் சோலார் மின் திட்டத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
7,500 கோடி ரூபாயில் டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட உள்ள நிலையில் அதற்கும் இன்று அடிக்கல் நாட்டுகிறார். நீர்மின் திட்டம், நீர் நிலைகளை சீரமைக்கும் 'அம்ரித் சரோவர்' திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க இருக்கிறார். அண்மையில் பஞ்சாப் பயணத்தின் பொழுது மோடியின் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரதமரின் இந்த காஷ்மீர் பயணத்தை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், ஜம்முவில் குண்டு வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாலியான் எனும் கிராமப் பகுதியில் குண்டு வெடித்ததாக கிராம மக்கள் தகவல் அளித்ததன் பேரில் போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.