தகவல் தொடர்பை இழந்த சந்திரயான் 2 உடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வரும் நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான 2 வகையான ஊதிய உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை துணை செயலர் எம். ராம்தாஸ் கையெழுத்திட்ட உத்தரவு கடிதம் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி 6வது மத்திய ஊதிய ஆணையத்தின் பரிந்துரை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் ஊதியத்தில் 40 சதவீதம் வரையில் ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்வது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எஸ்டி, எஸ்இ, எஸ்எஃப் மற்றும் எஸ்ஜி ஆகிய பிரிவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் ஊதிய உயர்வுகளை நிறுத்திக் கொள்ளும்படி விண்வெளித் துறைக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுரையின்படி, 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 2 வகையான கூடுதல் ஊதிய உயர்வுகளும் நிறுத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதத்துக்கு சராசரியாக 10 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் குறையும் என கூறப்படுகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதாக பரவும் செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.