Skip to main content

"ஒவ்வொரு அங்குலமும் நமது ராணுவ வீரர்களின் வீரத்தைப் பறைசாற்றும்" - பிரதமர் மோடி பேச்சு...

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

modi speech in ladakh

 

இந்திய எல்லைப்பகுதியில் உள்ள ஒவ்வொரு அங்குலமும் நமது ராணுவ வீரர்களின் வீரத்தைப் பறைசாற்றும் என ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

இந்தியா, சீனா இடையே பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சீனா இப்பகுதியில் ஆயுத பலத்தை அதிகரித்து வருவதால், இந்தியாவும் பதிலடி தரும் வகையில் ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று திடீர் பயணமாக 'லடாக்' சென்ற பிரதமர் மோடி அப்பகுதியில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ராணுவ பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றை ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு செய்த அவர், பின்னர் நிமு பகுதியில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 

அதன்பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய நாட்டைக் காக்க உயிர் நீத்த துணிச்சலான வீரர்களுக்கு வீர அஞ்சலி. நமது ராணுவ வீரர்களால் தான் மக்கள் நிம்மதியாக உள்ளனர். இந்திய ராணுவ வீரர்களின் மனவுறுதி மலையைப் போலப் பலமாக இருக்கிறது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதைக் காட்டியுள்ளது. நில விரிவாக்கத்திற்கான காலம் முடிந்துவிட்டது, இது வளர்ச்சியை நோக்கிய காலம். எல்லையை விரிவாக்கத் துடித்த நாடுகள் தோல்வியைச் சந்தித்ததற்கும், முயற்சிகளிலிருந்து பின்வாங்கியதற்கும் வரலாறு சாட்சி.

 

லடாக் இந்தியாவின் தலைப்பகுதி. இந்தியாவின் 130 கோடி குடிமக்களுக்கு இது பெருமையின் அடையாளமாகும். இந்த நிலம் நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக உள்ள மக்களுக்குச் சொந்தமானது. இந்த பிராந்தியத்தில் பிரிவினைவாதத்தை உருவாக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியும் லடாக்கின் தேசியவாத மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் வாசிக்கும் புல்லாங்குழலை வழிபடும் நாம்தான், சுதர்சன சக்கரத்தைச் சுமக்கும் அதே பகவான் கிருஷ்ணரைச் சிலையாக்கி வழிபடுகிறோம். எனக்கு முன்னால் உள்ள பெண் வீரர்களைப் பார்க்கிறேன். எல்லையில் உள்ள போர்க்களத்தில் இப்படிக் காண்பது ஊக்கமளிக்கிறது. எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான செலவினங்களை நாங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளோம். 'லே' பகுதியிலிருந்து சியாச்சின் வரை ஒவ்வொரு அங்குலமும் நமது ராணுவ வீரர்களின் வீரத்தைப் பறைசாற்றும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்