கரோனா காலத்தில் இந்தியாவுக்கு 20 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் கிடைத்துள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் 'இந்தியா ஐடியாஸ்' இரண்டுநாள் மாநாடு காணொளிக்காட்சி மூலமாக நடைபெறுகிறது. இதில் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் உரையாற்ற என்னை அழைத்த அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சிலுக்கு நன்றி. யு.எஸ்.ஐ.பி.சி இந்த ஆண்டு அதன் நாற்பத்து ஐந்தாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது. கடந்த பல தசாப்தங்களாக, யு.எஸ்.ஐ.பி.சி அமைப்பு இந்திய மற்றும் அமெரிக்க வணிகத்தை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது. உலகிற்கு ஒரு சிறந்த எதிர்காலம் தேவை என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம். மேலும், நாம் அனைவரும் கூட்டாக எதிர்காலத்திற்கு வடிவம்கொடுக்க வேண்டும். எதிர்காலத்திற்கான நமது அணுகுமுறை முதன்மையாக மனிதனை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்
இந்தியா திறந்த மனப்பான்மையுடன் வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் சரியான கலவையை வழங்குகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், நமது பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தப் பல முயற்சிகளை மேற்கொண்டோம். சீர்திருத்தங்கள் அதிகரித்த ‘போட்டித்திறன்’, மேம்பட்ட ‘வெளிப்படைத்தன்மை’, விரிவாக்கப்பட்ட ‘டிஜிட்டல்மயமாக்கல்’, அதிக ‘புதுமை’ மற்றும் அதிகமான ‘கொள்கை ஸ்திரத்தன்மை’ ஆகியவற்றை அரசு உறுதிசெய்துள்ளது. இந்தியா வாய்ப்புகளின் நாடாக வளர்ந்துவருகிறது. 5 ஜி, பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்றவற்றில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் சுகாதாரத் துறை ஒவ்வொரு ஆண்டும் 22 சதவீதத்தை விட அதிக வேகமாக வளர்ந்து வருகிறது. நம் நிறுவனங்கள் மருத்துவ-தொழில்நுட்பம் மற்றும் நோயறிதலின் உற்பத்தியிலும் முன்னேறி வருகின்றன ஒவ்வொரு ஆண்டும், அன்னிய நேரடி முதலீட்டில் நாம் புதிய சாதனை அளவை எட்டுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட முதலீடுகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன. 2019-20 இல் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 74 பில்லியன் டாலர்கள். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீத அதிகரிப்பு ஆகும். அதேபோல கரோனா கால ஊரடங்கின் போது, இந்தியாவுக்கு 20 பில்லியன் டாலர் முதலீடு கிடைத்தது" எனத் தெரிவித்துள்ளார்.