உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில்,
“கன்னியாகுமரி முதல் நாடு முழுவதும் ராமர் பெயர் ஒலிக்கிறது. இந்த தருணம் நடந்து முடிந்ததை கோடிக்கணக்கான இந்தியர்கள் இன்னமும் நம்பவில்லை. ராமனின் வரலாற்றை அழிக்க நடந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. சிறிய கூடாரத்தில் இருந்து வந்த ராமருக்கு பெரிய அளவில் கோயில் அமைந்துள்ளது. போராடி சுதந்திரம் பெற்றது போல் ஆயிரக்கணக்கானோர் தியாகத்தால் நமது கனவு நனவாகி இருக்கிறது. நமது கலாச்சாரத்தின் சமகால அடையாளம் இது. வெறுப்புணர்வை மறந்து கோடிக்கணக்கான மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி ராமருக்கு உள்ளது. உலகம் முழுவதும் பக்தர்கள் வர உள்ளதால் அயோத்தி மிகச் சிறப்பாக வளர்ச்சி பெறும். ராமர் கோயில் அமைவதற்காக பல தலைமுறைகள் தியாகங்களை செய்துள்ளனர். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் ஒற்றுமைக்கு ஒரு பாலமாக அமையும். அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ராமருக்கு அனைத்து தரப்பும் உதவியது போல் அனைத்து தரப்பும் ராமர் கோயிலை கட்டுவோம். சத்தியத்தின் வழியில் நாம் அனைவரும் நடக்க வேண்டும் என்பதை ராமர் எடுத்துக்காட்டியுள்ளார். தமிழில் கம்பராமாயணம் போன்று பல்வேறு மொழியில் இராமகாவியம் இருக்கிறது.
ராமராஜ்யமே மகாத்மா காந்தியின் கனவாக இருந்தது. கம்ப ராமாயணத்தில் ராமர் கூறிய ''இனி தாமதிக்கக்கூடாது முன்னேற வேண்டும்'' என்பதே நமக்கான செய்தி. நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது. ராமரைப் பற்றி அறிந்திருக்கும் பல்வேறு நாட்டு மக்கள் ராமர் கோயில் கட்டுவது குறித்து மகிழ்ச்சியில் உள்ளனர். ராமரின் கொள்கை நம் நாட்டை பல ஆண்டுகளாக வழிநடத்துகிறது என்றார்.