அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜோ பைடனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளார் பிரதமர் மோடி.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் முறையாக அதிபர் மற்றும் துணை அதிபராக வரும் ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ளனர். இந்நிலையில், சர்வதேச நாடுகள் பலவும் பைடனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், ஜோ பைடனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு தொலைபேசியின் வழியாக வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கான நமது உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். மேலும், திருநாட்டின் பொதுவான சிக்கல்களான கரோனா தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு பற்றி விவாதித்தோம். துணை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசுக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவரது வெற்றி இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மிகப்பெரிய பலமாக விளங்கும். இது துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தின் உறுப்பினர்களுக்கு மிகுந்த பெருமை மற்றும் உத்வேகம் அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.